இந்திய போக்குவரத்துத் துறைகளில் மிகவும் மலிவான போக்குவரத்தாக அறியப்படும் ரயில்வேயில் புறக்கணிக்கப்பட்டு வந்த சமூக நீதி, சம உரிமை உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளின் உந்துதலால் மேலோங்கி வரத் தொடங்கியுள்ளது.
அதன்படி, இந்திய அரசின் பழம்பெரும் போக்குவரத்துத்துறையாக அறியப்படும் ரயில்வே துறை தொடங்கப்பட்டு 119 ஆண்டுகள் நிறைவடைந்தும், அதன் வாரியத் தலைவர் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கே வழங்கப்பட்டு வந்த முறை, சென்ற ஆண்டுடன் நிறைவடைந்தது.
கடந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, ரயில்வே வாரியத்தின் தலைவர் பொறுப்பு ஜெயா சின்ஹா என்ற ஒரு பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டில் ஜெயா சின்ஹா ஓய்வு பெறுவதையொட்டி, முதன்முறையாக ரயில்வே வாரியத் தலைவர் பொறுப்பு, பட்டியலினத்தை சேர்ந்த சதிஷ் குமார் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே பொறியாளராக 1986ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் இணைந்த சதிஷ் குமார், வரும் செப்டம்பர் 1ஆம் நாள், ரயில்வே வாரிய தலைவர் பொறுப்பேற்கிறார்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், சமூக நீதிக்கான போராட்டங்களின் வெற்றியாகவும், சமூக சம உரிமைக்கான இந்தியா கூட்டணி எழுப்பிய குரலின் பதிலொலியாகவும், இந்நியமனம் ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.