இந்தியா

SEBI தலைவரும் அதானியின் பங்குதாரர் தான்! : Hindenburg வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

18 மாதங்களுக்கு முன்பு, அதானி குழுமத்திற்கு ஆட்டம் காட்டிய ஹிண்டன்பர்க் நிறுவனம், மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

SEBI தலைவரும் அதானியின் பங்குதாரர் தான்! : Hindenburg வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய அரசிற்கும், அதானி குழுமத்திற்கும் தவிர்க்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது, வானூர்தி நிலையங்கள், சூரிய ஒளி மின்சார நிலையங்கள், இராணுவ தளங்கள், நிலக்கரி சார்ந்த தொழில்கள் என அரசு உடைமைகள் பல அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டதிலிருந்தே அறியக்கூடியதாய் அமைந்துள்ளது.

அதன் காரணமாகவே, அதானியின் பங்குகளும் உச்சம் தொட்டுள்ளன. 18 மாதங்களுக்கு முன்பு, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராகவும் விளங்கினார் அதானி.

ஆனால், உச்சத்தை ருசித்துக்கொண்டிருந்த அதானிக்கு அப்போது ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்கிற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் நடக்கின்றன என்ற தகவலை வெளியிட்டது. இதனால், அதானியின் பங்குகள் ஏற்றம் கண்ட வேகத்தில், இறக்கம் கண்டது.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வைத்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தாலும், உலக அளவில் அதானி குழுமத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், அக்குற்றச்சாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்க மறுத்தது.

SEBI தலைவரும் அதானியின் பங்குதாரர் தான்! : Hindenburg வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்த குளறுபடிகள் குறித்த தீவிர விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததற்கு, உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) விசாரணை செய்ய உத்தரவிட்டது.

ஆனால், SEBI அமைப்பு, அதானி குழுமத்தை காப்பதற்கான வேலைகளையே முடுக்கிவிட்டது. விசாரணையில் தொடர் மந்தம் நீடித்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள், அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்த குளறுபடிகள் குறித்த விசாரணை, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தின. அதனை மறுபரிசீலனை செய்த உச்சநீதிமன்றம் இறுதியில், SEBI விசாரணையே போதுமானது என்றது.

இந்நிலையில், 18 மாதங்களுக்கு முன்பு, அதானி குழுமத்திற்கு ஆட்டம் காட்டிய ஹிண்டன்பர்க் நிறுவனம், மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்த குளறுபடிகளை விசாரித்து வரும், SEBI அமைப்பின் தலைவர் மதாபி பூரி புச்-ம், அவரது கணவரும் கூட, அதானி குழுமத்தின் பங்குதாரர்களே என்பது தான் அந்த தகவல்.

இதனால், அதானி குழுமத்தின் மீதான சர்ச்சை மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளது. இது குறித்து, திரிணாமுல் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்திரா, “அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த செபி விசாரணையை நம்ப முடியாது. உச்சநீதிமன்றம் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “அதானி பங்குச் சந்தை முறைகேடு குறித்த SEBI விசாரணையில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் நீக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானி மெகா ஊழலில் பல உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories