ஒன்றிய பாஜக அரசுக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், பாஜக அரசு, அரசின் சொத்துகள் உள்பட பலவற்றை அதானி குழுமத்திற்கே வழங்கி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. அதன்படி விமான நிலையங்கள், சூரிய ஒளி மின்சார நிலையங்கள், இராணுவ தளங்கள், நிலக்கரி சார்ந்த தொழில்கள் என அரசு உடைமைகள் பல அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசின் பெரிய உறுதுணை இருப்பதாலே, அதானியின் பங்குகளும் உச்சத்தில் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராகவும் விளங்கினார் அதானி. இந்த சூழலில்தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை வெளிப்படுத்தியது.
தொடர்ந்து அதானியின் ஊழலையும் வெளிகொண்டு வந்தது. இதனால் அதானியின் சர்வதேச பங்குச்சந்தை மதிப்பு சரிவில் காணப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் விவாதம் கேட்டபோது, அதற்கு ஒன்றிய பாஜக அரசு மறுப்பும் தெரிவித்தது. தொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் SEBI விசாரணையை முறையாக நடத்தாமல் மந்தமாக செயல்பட்டது. இதனால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், SEBI விசாரணையே போதுமானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும் இதுகுறித்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, "விரைவில் சந்திப்போம் இந்தியா" என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ள ஹிண்டன்பர்க், தற்போது அதானி ஊழலில் SEBI தலைவருக்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதானி குழுமம் முறைகேட்டிற்கு பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் SEBI தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோருக்கும் பங்குகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதனால்தான் இந்த விசாரணையை SEBI மிகவும் மெதுவாக விசாரிபபதாகவும், SEBI தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி மாதபி ஆதாயம் தேடுவதாகவும், எனவே SEBI விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் Hindenburg தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதற்கான ஆதாரங்களையும் தனது தள்த்தில் வெளியிட்டுள்ள Hindenburg, மேலும் பல குற்றச்சாட்டுகளை அதில் தெரிவித்துள்ளது.
இந்த பகிரங்க குற்றச்சாட்டால் அதானி பங்குகள் சரிய வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சரிக்கட்ட மக்கள் மத்தியில் பிம்பத்தை உருவாக்க அதானி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகிறது. அதன்படி தற்போது '#EconomyWillNeverDie' (பொருளாதாரம் சரியப்போவதில்லை) என்ற ஹேஷ்டாக்கை பல போலி கணக்குகள் மூலம் ட்ரெண்ட் செய்ய முயற்சித்து வருகிறது.
இதனை பிரபல உண்மை கண்டறியும் நிபுணரான முகமது சுபைர், தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "அதானி பங்குகளை பாதுகாக்கும் முயற்சியில் அழகான DP-களுடன் பல போலி கணக்குகள் #EconomyWillNeverDie என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறது" என்று குறிப்பிட்டு அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார்.