நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளும் கூறி வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.அப்போது,சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேற்று பதிலளித்த ஒன்றிய அமைச்சர்,”தன்னுடைய சாதி என்ன என்றே தெரியாதவர் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறார்” என வன்மத்தோடு விமர்சித்தார். அப்போது அவையில் இருந்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், ”சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி நான் பேசுவதால் பாஜகவினர் என்னை அவமதிக்கிறார்கள்.நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள். எவ்வளவு அவமானப்படுத்தினாலும், எனது இலக்கில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், மறந்துவிடாதீர்கள், நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம்” என ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த சாதிய ஒடுக்குமுறையை மறக்க மாட்டேன் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் இது குறித்து கூறிய அகிலேஷ் யாதவ், ”டிஜிட்டல் இந்தியாவென பேசும் காலத்திலும் கூட நாடாளுமன்றத்தில் வைத்து ராகுல் காந்தியின் சாதியைக் கேட்கிறார்கள் பா.ஜ.கவினர். முதலமைச்சரின் வீடு, நான் வெளியேறிய பிறகு கங்கை நீர் கொண்டு கழுவப்பட்டது. நான் சென்று வந்த பிறகு கோவில் கழுவி விடப்பட்ட நாளை நான் மறக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.