பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்ட போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தால் கடந்த 2020-ம் ஆண்டு ‘கூ’ செயலி தொடங்கப்பட்டது. ட்விட்டருக்கு போட்டியாக இந்திய சந்தையில் கொண்டுவரப்பட்ட இந்த செயலி ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக உண்மை செய்திகளை வெளியிட ட்விட்டர் நிறுவனம் அனுமதித்ததால் அதற்கு மாற்றாக ‘கூ’ செயலியை பாஜகவினர் பிரபலப்படுத்தினர்.
‘கூ’ செயலியை வலுப்படுத்துவதற்காக ஒன்றிய அமைச்சர்கள் பலரும் ‘கூ’ செயலிக்கு மாறினர். எனினும் ட்விட்டரின் இடத்தை ‘கூ’ செயலியால் பிடிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் போதிய ஆதரவு இல்லாததால் ‘கூ’ செயலியின் உரிமையாளர்களுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், ‘கூ’ செயலியின் சேவையை நிரந்தரமாக நிறுத்திவிடுவதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த செயலியின் நிறுவனர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில். "இந்நிறுவனத்தைத் தொடங்கி இத்தனை நாள்கள் செயல்படுத்தி வந்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. இதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எங்களின் நன்றி.
இதே களத்தில் வேறு புதிய சிறந்த ஐடியாவோடு நாங்கள் மீண்டும் வருவோம். மஞ்சள் பறவையின் கடைசி குட் பை இது. இதில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். இந்தியாவைத் தொழில்நுட்பத்தில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்நிறுவனத்தைத் தொடங்கி இத்தனை நாள்கள் செயல்படுத்தி வந்ததில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளனர்.