குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக பாஜக ஆட்சியில் நடைபெறும் அத்தனை குற்றச்சம்பவங்களும் இங்கும் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குஜராத்தும் ஒரு முக்கிய நகரமாக இடம்பெற்றுள்ளது. போதை குற்றச்சம்பவங்களில் முதலிடத்தில் குஜராத் திகழ்கிறது.
இவ்வாறு பாஜக ஆளும் குஜராத்தில் முக்கிய குற்றச்சம்பவங்களில் போலீசாரும் உடந்தையாக இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துவ வருகின்றன. இந்த சூழலில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக பாஜக தலைவர் ஒருவரது பிறந்தநாளை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஹிமான்ஷு சௌகான் என்பவரது பிறந்தநாள் குஜராத்தின், அகமதாபாத்தில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை குஜராத் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டிசிபி கனன் தேசாய் உள்ளிட்ட போலீசார் உள்ளனர்.
மேலும் பாஜகவை சேர்ந்த ஹிமான்ஷு சௌகான், யோகேஷ் கத்வி உள்ளிட்டோரும் அவர்களுடன் உள்ளனர். அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு கொண்டாடினர். பிறந்தநாள் வாழ்த்து பாடலின் இறுதியில் 'பாரத் மாதா கி ஜெய்' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து குஜராத் காங்கிரஸ், "காவல்துறையினர் பாஜக தலைமையிடம் இருந்து சம்பளம் பெறுவதுபோல் காவல் நிலையத்தையே பாஜக அலுவலகம் போல் மாற்றிவிட்டனர். பாஜக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் காவல் நிலையங்கள் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவா? அல்லது பாஜகவின் கட்சி கூடங்களாக இருக்கவா? மாநில அரசே பதில் வேண்டும்” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.