‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’, “உங்களின் கலாச்சாரங்களையும், நிலம் மீதான உரிமையையும் என்றும் விட்டு கொடுக்காதீர்” என்று எப்போதும் தான் பேசும் இடங்களில் மக்களிடம் உறக்க வலியுத்துவார் பூமியின் தந்தை பிர்சா முண்டா.
இந்தியா சுதந்திரம் பெறாமல் இருந்த காலத்தில் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர்தான் பிர்சா முண்டா. பூமியின் தந்தை என்று பழங்குடி மக்களால் அழைக்கப்பட்ட பிர்சா முண்டாவின் நினைவு தினம் இன்று.
சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து இன்று வரை ‘பொருளாதார பிரிவினை’ வளர்ந்து கொண்டே செல்கிறது. அதில் இருந்தும் முழு சுதந்திரத்தை எதிர்ப்பார்த்தவர்தான் பிர்சா முண்டா.
சுதந்திர வீரர்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது காந்தி பின்னர் அவரைத் தொடர்ந்து பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் இன்னும் பலர். ஆனால் இவர்களுக்கும் முன்னோடியாக ஆங்கிலயரைத் தனது நிலத்தில் இருந்து எதிர்த்தவர் 19 வயது ஆன பிர்சா முண்டா.
இவர் 1875ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி இராஞ்சி மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் சுகன் முண்டா. பிர்சா முண்டா வாழ்நாளில் படிப்பு என்பது முக்கிய அங்கம் வகித்தது. சிறிது காலம் மிஷனரிப் பள்ளியில் படித்தார். பின் தன் ஆசிரியரின் வழிகாட்டுதலால் ஜெர்மன் மிஷன் பள்ளியில் படித்தார்.
இந்தியாவில் ‘சர்தார்’ கலவரத்தின் போது பிரிட்டிஷார்கள் எப்படியெல்லம் பழங்குடியினரை அடக்கியாண்டார்கள் என தெரிந்து கொண்டார். பின்னர், பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக முழு நேரமாகப் போராடுவதற்கு தயார் ஆனார்.
“ஆங்கிலேயர்கள் இந்திய மக்களை அடிமைப்படுத்துகிறார்கள், மக்களைச் சித்ரவதை செய்து அவர்களின் சொத்துக்களைச் சுரண்டிச் செல்கிறார்கள்” என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது முதல் போர்கொடி பிரச்சாரத்தை துவங்கினார். ஆங்கிலேய அரசின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவந்து இந்தியாவை இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று உணர்த்தினார்.
ஜமீன்தார்கள், பழங்குடிகளின் நிலத்தை வட்டிக்குக் கடன் கொடுக்கிறேன் என்ற போர்வையில் பிடுங்கி வைத்திருந்தார்கள். அடிமையாகவும், கூலிகளாகவும் வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அவர்களின் இந்த சுரண்டல்களையும் எதிர்க்கவும் பழங்குடியினரைக் காக்கவும் ‘உல்குலான்’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். தன் 19 வயதிலே தன் நில மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டார்.
அதுமட்டுமின்றி, 1890ம் ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போதுதான் சோட்டா நாக்பூர் பகுதிகளில் மக்களை ஒன்று சேர்த்தார். 1894 அக்டோபர் மாதம் 1ம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காட்டுவரியை ரத்துசெய்யமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவிலேயே நடந்த முதல் போராட்டம். பின்னாளில் இவரின் போரட்டத்தின் சாரம் புரிந்து மற்ற நில பழங்குடியினர் இனத்தவர்களும் இவருடன் இணைந்துகொண்டனர்.
1900ம் ஆண்டு கொரில்லா வீரர்களின் உதவிகொண்டு சே குவாராவின் கொரில்லா முறையிலான உத்தியை தனது பழங்குடியின மக்களுக்கு பயற்றுவித்தார். பழங்குடியினர்கள் இவரது தலைமையில் போரிட்டு பல பிரிட்டிஷ் அரசாங்கப் போலிஸார்களைக் கொன்று குவித்தார்கள்.
இவரின் இத்தகைய போராட்டம் பிரிட்டிஷாரை கொதித்தெழ வைத்தது. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா முண்டா சிறையில் பல விடுதலை போராட்ட அனுபவங்களைக் கற்றுக்கொண்டார். சிறையில் இருந்து வெளியே வந்தும் ஓயாமல் தீவிரமாகப் போராடினார். சிறையில் தங்களின் குழுக்களில் இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்க முடிவு செய்திருந்ததால், தன் இனக் குழுவிலேயே இருந்த மூடநம்பிக்கைகளுக்காகவும், பலி கொடுப்பது, குடிப்பழக்கத்திற்கு எதிராக மக்களை நல்வகைப்படுத்தினார்.
ஆங்கிலேயர்களால் தான் அடைய போகும் பெரும் துயரத்தை அனைத்து பழங்குடியின மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை ஒன்றினைத்தார். அப்போது மக்களிடையே பேசும் போது , “வெளியே உள்ள அழுக்கை சுத்தபடுத்துவதை காட்டிலும் நமக்குள் இருக்கும் குறைகளை சீர் செய்ய வேண்டும். உழுபவனுக்கே நிலம் சொந்தம், உங்களின் கலாச்சாரங்களையும், நிலம் மீதான உரிமையையும் என்றும் விட்டு கொடுக்காதீர்” என நிலம் மீதான உரிமையை கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார்.
பின்னர் இந்த மக்களை ஒருக்கிணைக்கும் பிர்சா முண்டாவின் முயற்சி ஆங்கிலேயர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தவே, அவருடன் இருந்த ஆதரவாளர்கள் பலரை சுட்டு கொலை செய்தனர். பின்னர் தலைமறைவாகி மக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபட்ட பிர்சா முண்டாவை கைது செய்த ஆங்கிலேய அரசு பல்வேறு சித்ரவதைகளை அளித்தது. 1900ம் ஆண்டு தனது 25ஆவது வயதில் சிறையிலேயே மரணமடைந்தார்.
பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் வாழ்ந்த 25 ஆண்டுகளில் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவு கூறுகிறார்கள். அதனால் தற்போது பீகார், ஜார்க்கண்ட் பகுதி பழங்குடி இனமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர இந்தியாவை பெற பல ஆளுமைகளை பலிகொடுத்துள்ளோம். அவர்களின் வீரத்தால் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தற்போது பறிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிர்சா முண்டா கனவு இன்றும் நிறைவேறாமல் உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும். இன்றைக்கும் நம் நாட்டில் பழங்குடிகளின் நிலைமை மோசமாகவே இருக்கிறது.
ஆங்கிலேயர் காலத்தைப் போலவே இன்றைக்கும் நில உரிமை மறுக்கப்பட்டு, பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள். காடுகளை சூறையாடியதற்கு எதிராகவும், இயற்கை மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்க போராடிய பிர்சா முண்டாவின் இலட்சியம் மோடி அரசால் சிதைந்து வருகிறது. அந்த இலட்சியத்தை காப்பாற்றவே பழக்குடியின மக்கள் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கோண்ட் மற்றும் முண்டா பாதாவில் உள்ள வனப்பகுதியில் 4,000 ஏக்கர் பரப்பளவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. அந்த நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமம் நடத்தவுள்ளது.
இந்நிலையில் 4,000 ஏக்கரில் 54% நிலம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை அழித்து நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தில் பிர்சா முண்டா இனக்குழு பழங்குடியினர்கள் முன்னிலையில் நின்று போராடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே மாவட்டத்தில் உள்ள 10,000 பழங்குடியின மக்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் பிர்சா முண்டாவின் சொந்த மாவட்ட மக்கள் ஆவார்கள். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அனுபவித்து வந்த அதே ஒடுக்குமுறையை சுதந்திரத்திற்கு பிறகும் அனுபவித்து வருகிறார்கள் பழங்குடியின மக்கள்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் இலட்சியங்களை பாதுகாக்க தேச மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பழங்குடியின மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ‘ஜமீன் ஹமாரே’ - பழங்குடிகளின் நிலத்தைப் பறிக்க நினைக்கும் அரசுகளுக்கு எதிராக பிர்சா முண்டாவின் கோஷத்தை நினைவுகொள்ள வேண்டிய தினம்!