ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதில் காட்டிய வேகத்தை விட எதிர்க்கட்சி மாநில அரசை எப்படி சதி செய்து கவிழ்க்கலாம் என்பதில்தான் அதிகமான நேரத்தை செலவு செய்துள்ளது.
ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் மகாராஷ்டிரா, பீகார், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைச் சதி செய்து கவிழ்த்தது. டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையாகும். அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசையும் கவிழ்க்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்த்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு 92 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
பஞ்சாப் மக்கள் தேர்ந்தெடுத்துள்ள ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, முதலமைச்சரை அகற்றுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அரசை கவிழ்க்க ஒன்றிய அரசு சதி திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.
பஞ்சாப் மக்களைப் பயமுறுத்துவதற்காக, சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறையை அனுப்புவார்களா?. குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த திட்டமிடுகிறீர்களா?. உங்கள் திட்டங்கள் என்ன? என பஞ்சாப் மக்கள் அமித் ஷாவிடம் கேட்க விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.