மருத்துவ படிப்புக்களுக்கு கட்டாய நீட் தேர்வை ஒன்றிய அரசு அறிவித்தது முதல் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துபோய் வருகிறது. நீட் தேர்வை தமிழ்நாடு அரசும், மக்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று சட்டரீதியாக எதிர்கொண்டு வருகிறது. நீட் தேர்வால் அதிகளவு தனியார் மையங்கள் செயல்பட்டு வருகிறது.
பல லட்சம் கொடுத்து படிக்கும் மாணவர்கள் மத்தியல் ஏழை மாணவர்களால் சாதிக்க கடினமாக இருப்பதால், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் முடித்து கொண்டு வருகின்றனர். நீட் தேர்வால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். அண்மையில் கூட நீட் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள், ராஜஸ்தானில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் தற்கொலை என்றால், மறுபக்கம் முறைகேடு என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாகவும், தேர்வுக்கு முந்தைய நாளில், வினாத்தாளை பணம் கொடுத்து வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது ராஜஸ்தானில் நீட் தேர்வு முடியும் முன்னரே, அதன் வினாத்தாள் இணையத்தில் வெளியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) நடைபெற்ற நீட் தேர்வானது முடியும் முன்னரே, மாணவர்கள் வினாத்தாளுடன் வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணியளவில் (3 மணிநேரம் 20 நிமிடம்) முடியும். ஆனால் வினத்தாளோ தேர்வு முடிவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியாகியுள்ளது. தேர்வு முடியும் முன்னரே அவர்கள் எவ்வாறு மாணவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்/ என்று பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
மேலும் சிலருக்கு உதவுவதற்காக மாணவர்கள் கேள்வித்தாளுடன் வெளியேறி இருக்கலாம் என்று பல மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேர்வு எழுதிய மையத்தில் இருந்த 120 மாணவர்களில், சிலர் முன்கூட்டியே கேள்வித்தாளுடன் வெளியேறியதை தேசியத் தேர்வு முகமை உறுதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசியவிட்ட விவகாரம் உள்ளிட்ட மோசடியில் ஈடுப்பட்ட பாட்னா, டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் மாணவர்கள், மைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் 13 பேர் ஆவர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அவர்களிடம் ரூ.40 லட்சம் வசூலித்தது அம்பலமாகியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ராஜஸ்தானை சேர்ந்த மாணவர்கள் 3 பேர், டெல்லியில் உள்ள மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது. அதேபோல் ராஜஸ்தானிலும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் மாணவர், தனது தம்பிக்காக தேர்வு எழுத வந்துள்ளார்.