யார் பிரதமராக இருந்தாலும் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "உலக பொருளாதாரத் தரவரிசை 2024-ன்படி, அமெரிக்கா,சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4.8 டிரில்லியன் டாலருடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
தற்போது, ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மதிப்பானது ஏறக்குறைய ஒரேமாதிரி அளவாக உள்ளது. 2004-ல் இந்தியா ஜிடிபி வளர்ச்சியில் 12-வது இடத்தில் இருந்தது. பின்னர் 2014-ல் ஏழாவது இடத்துக்கு முன்னேறியது. 2024-ல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே, யார் பிரதமரானாலும் இந்தியா 3-வது பொருளாதார நாடாவதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது .
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு என்பது மக்களின் செழுமைக்கான உண்மையான அளவீடுஅல்ல. தனிநபர் வருமானம் மட்டும்தான் நாட்டு குடிமக்களின் உண்மையான வாழ்க்கைத்தரத்தை எடுத்துக்காட்டும் அளவுகோல்.
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியா தனிநபர் வருமானம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2ஆயிரத்து 731 டாலருடன் 136-வது இடத்தில்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.