கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் வைக்கப்பட்ட அறிக்கையில் நாட்டிலேயே அதிகமான போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில்தான் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிலும் இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலின் தலைநகராக இருப்பது குஜராத் மாநிலம்தான் என்றே கூறப்படுகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து சிறிய வகை கப்பலில் கொண்டுவரப்பட்ட 3,300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை காவல்துறை கைது செய்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து போதைப் பொருள் விற்கும் அளவுக்கு ‘பாதுகாப்பான’ மாநிலமாக குஜராத் இருக்கிறது என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
இந்த நிலையில், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 149 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இரண்டு ஆய்வுக்கூடங்களிலும், குஜராத்தில் அம்ரேலியில் ஓர் ஆய்வுக்கூடத்திலும் போதைப்பொருள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி அங்கு போலீசார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள் மற்றும் 149 கிலோ போதைப்பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.