இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த போர் காரணமாக இஸ்ரேலின் சுற்றுலாத்துறை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், கட்டட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் கட்டட வேலைக்கு பெரும்பாலும் மேற்குக்கரையை சேர்ந்த பலஸ்தீனியர்களே தொழிலாளர்களாக பணிபுரிந்த நிலையில், இந்த போர் காரணமாக அவர்கள் இஸ்ரேலுக்குள் வருவதை நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இஸ்ரேல் அரசு வெளிநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் மிகவும் பின்தங்கிய, வறுமை அதிகமுள்ள மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை களமிறக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் முடிந்துள்ளதாகவும், விரைவில் இங்கிருந்து தொழிலாளர்கள் இஸ்ரேல் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.