இந்தியாவின் கடன் தொகை அதிகரித்துள்ளது, தனி மனித வருமானம் கணிசமாக குறைந்துள்ளது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, வறுமை உச்சம் தொட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகளால், ஒன்றிய பா.ஜ.க மீது விமர்சனங்கள் அடுக்கிவிடப்பட்டு வருகின்றன.
எனினும், உலகிலேயே பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ச்சியடையும் நாடு இந்தியா தான். 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா, விரைவில் 3 ஆவது இடத்தை பிடிக்கும். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் உள்ள நாடு இந்தியா தான் என்று தெரிவித்து வரும் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜெய்சங்கர் தான், நாட்டின் நிலையை தற்போது கொச்சைப்படுத்தியுள்ளார். அதற்கு நாட்டின் பிரதமரான மோடியும் உடந்தையாக, எக்கருத்தும் தெரிவிக்காமல் வெள்ளைக் கொடி காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும், நிலச்சிக்கல் என்பது ஏதோ, எங்கிருந்தோ தற்போது புதிதாக முளைத்ததல்ல.
இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்தே, நடந்து வரும் சிக்கல் தான், எனினும் உலக நாடுகளுக்கு அதிகளவில் சீன பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவது போல, இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பதால்,
இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கை, ஏற்றத்திலும், இறக்கத்திலும் இருந்து வந்தாலும், எல்லைகளை கைப்பற்றாத வண்ணம், இந்திய அரசு கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது.
ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின், அந்த நிலைப்பாட்டிலும் பலவீனம் உண்டாகி, தற்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு பெயர்மாற்றம் செய்யும் அளவிற்கு முன்வந்துள்ளது சீனா.
கூடுதலாக, இந்தியாவின் வடமுனை பகுதியான லடாக்கிலும் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளது என்ற முழக்கத்துடன், லடாக் மக்கள் போராடி வருகின்றனர்.
எனினும், இச்செய்தி மாநில அரசுகளால் பெரிதளவில் பேசப்படாமல் இருக்கும் வகையில், அம்மாநிலங்களின் அரசை தன் கைக்குள் அடக்கி வைத்துள்ளது பா.ஜ.க.
அரசால் பேசப்படாவிடினும், மக்கள் களத்தில் இறங்கி போராடி வரத் தொடங்கிய நிலையில், உரிமைகளை கோரி களத்திற்கு வரும் மக்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க, சீனா என்ற பேச்சை எடுத்தாலே கால் நடுங்கி வருகிறது.
இந்த நடுக்கம், தற்போது உருவானது அல்ல. 4 ஆண்டுகளுக்கு முன்பே சீன இராணுவம், இந்திய எல்லைக்குள் நுழைகிறது என்ற செய்தி வந்தபோது, பிரதமர் மோடி, “யாரும் நாட்டின் எல்லைக்குள் நுழையவில்லை. முக்கியமாக சீனர்கள் உள்நுழைவு அறவே இல்லை” என X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, 4 ஆண்டுகள் கழித்து, சீனர்களின் ஆக்கிரமிப்பு உச்சத்தை தொட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீனா பொருளாதாரத்தில் பெரிய நாடு. பொருளாதாரத்தில் சிறிய நாட்டினைக் கொண்டு நான் என்ன செய்வது” என்றும், “நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், உங்கள் வீடு எனக்கு சொந்தமாகி விடுமா” என்றும் மழுப்பல் பதில்களை தெரிவித்து வருகிறார்.
அதற்கு ஒரு படி மேல் சென்று, பிரதமர் மோடி, சீன சிக்கலில் வாய் திறக்க திராணியற்றது அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில், கச்சத்தீவு என முழக்கமிட்டு வருகிறார்.
ஆனால், அந்த நகர்விலும் மோடி அரசின் மூக்கு உடையும் விதமாக, “கச்சத்தீவு நிலப்பகிர்வு குறித்து இந்திய அரசு, தங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் உண்டாக்கவில்லை” என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு, ஒரு நாட்டிற்கு பயந்து, மற்றொரு நாட்டுடனான சிக்கலை கொண்டு வர, அந்த நாட்டிடமும் மூக்கடிப்பட்டிருக்கும் பா.ஜ.க, மீண்டும் மோடியின் தாரக மந்திரமான ‘அமைதி’ நிலைக்கு சென்றுள்ளது.