ஒன்றிய பா.ஜ.க அரசு தன அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதையும், அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி,"கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெறுவதுபோல், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களை கைது செய்யும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதே அதற்கு உதாரணம். ஊடகங்களை அடிமைப்படுத்தி, நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம் என மோடி கூறி வருகிறார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்கி தேர்தலில் போட்டியிட விடாமல் பாஜக தடுக்கிறது. மோடியின் இந்த சூதாட்ட வேலைகள் ஏழை மக்களின் உரிமைகளை பறிப்பதற்காகவே வேலை செய்கிறது. இந்திய அரசியலமைப்பு, இந்தியர்களின் குரலை பாஜக நசுக்க முயற்சிக்கிறது.
இந்தியர்களின் குரலை யாராலும் ஒடுக்கவோ, நசுக்கவோ முடியாது. இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஏழைகள் மற்றும் விவசாயிகள் என அனைவரது வருமானமும் குறிப்பிட்ட சிலரிடம் செல்வதாகவும், அதனை முறியடிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.