இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்கள், தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) எனப்படும்.
இந்நடத்தை விதிகளின் படி, எந்த கட்சியை சார்ந்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும், மதம் சார்ந்த அல்லது வகுப்புவாதம் சார்ந்த பேச்சுகளிலோ, நடத்தைகளிலோ ஈடுபடக்கூடாது.
தனிப்பட்ட முறையில், யாரையும் தாக்கி பேசக் கூடாது. மத ஆலயங்களில், பிரச்சாரம் செய்ய கூடாது.
குடிமக்களுக்கு தொந்தரவு வராத வகையில், தக்க அனுமதி பெற்று பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவை தவிர்த்து, பொதுக் கூட்டங்கள் எவ்வாறு நடக்க வேண்டும், தேர்தல் நாளில் என்ன செய்ய வேண்டும்/ கூடாது உள்ளிட்ட பல நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கென இந்திய அரசியலமைப்பில், சட்டப்பிரிவு 324 என்கிற தனி பிரிவே வகுக்கப்பட்டுள்ளது.
எனினும், இவை யாவும் தற்போதைய சூழலில், நடைமுறையில் இருக்கிறதா என்றால், பகுதி அளவு தான் இருக்கிறது.
அதாவது, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடைபெறுகிறது. ஆனால், ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு துகள் கூட நகர மறுக்கிறது என்பதேயையே, அண்மை நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இதனால், ஒன்றிய பா.ஜ.க முன்னெடுக்கிற, அரசியலமைப்பிற்கு எதிரான வெறுக்கத்தக்க பொது வெளிப்பேச்சுகள், பொய் செய்தி பரப்பல், ஒன்றிய அரசின் திட்ட விரிவாக்கங்கள், புதிய அரசு ஆணைகள் ஆகியவை வலுக்கத் தொடங்கியுள்ளன.
எடுத்துக்காட்டாக, கடந்த 10 ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்சட்டத்தின் (MGNREGA) கீழ், பணிபுரிவோரை ஏறிட்டு கூட பார்க்காத ஒன்றிய பா.ஜ.க, தற்போது ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.
ஆனால், அதிலும் பாரபட்சம் பார்த்து, ரூ. 3 முதல் ரூ. 10 வரை என்ற ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதை வைத்து, அடிப்படை தேவைகளை கூட தீர்க்க செய்ய இயலாது என்று கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர் MGNREGA ஊழியர்கள்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைப்பும், இது போன்றதே. இவ்வாறு, ஆட்சியில் மலை உச்சி அளவு விலைவாசியை உயர்த்தி விட்டு, தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின், சட்டவிரோதமாக அடுக்கடுக்காக விலைவாசிகளை கணக்கிற்காக குறைப்பது எவ்விதத்தில், மக்களுக்கு உதவும் என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.
இவை தவிர்த்து, தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், தான் இடஒதுக்கீட்டில் பதவி பெறவில்லை என பொய் சொல்லி மாட்டுவது, பணம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
எனினும், இச்செயல்கள் எவையும் தேர்தல் ஆணையத்தில் கண்ணில் படுவதில்லை. அனால், எதிர்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் மட்டும், முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால், நடுநிலையாக செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கும், தேர்தல் ஆணையத்தின் மீதும், ஒன்றிய பா.ஜ.க.வின் உட்கருத்துகள் பாய்ந்துவிட்டதா? என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.