புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் அச்சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்த பெற்றோர் சிறுமி கிடைக்காததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் சோலை நகர் பகுதியில் கால்வாயில் சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல் ஒன்று கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரித்தபோது அதுமாயமான சிறுமிதான் என்பது உறுதியாது.
இதையடுத்து சிறுமியை யார் கொலை செய்தது என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்குள் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுமி கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களை போலிஸார் தடியடி கொண்டு விரட்டியடுத்தனர். பின்னர் சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பத்திற்கு ராகுல் காந்தி MPயும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது x சமூகவலைதள பதிவில், ”புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன?
2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், அதில் 31 ஆயிரம் வழக்குகள் பாலியல் தொடர்பானவையாகும். இதுபோன்ற சம்பவம் கொடூரமான சமூகத்தை பிரதிபலிக்கிறது. பெண்களின் பாதுகாப்பும் மரியாதையும்தான் ஒரு வளர்ந்த தேசத்தின் அடையாளம்” என தெரிவித்துள்ளார்.