ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் உத்தரவுகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்றவில்லை." தமிழ்நாடு அரசு வாதம் செய்தது. மேலும் ஆலை கழிவுகள் தற்போதும் ஆற்றில் கொட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
அதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் 800 பக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் எப்படி எல்லாம் விதிமுறைகள் நடந்துள்ளன என்பது தொடர்பாகத் தெளிவாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதைப் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், "ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா? இல்லையா? என்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தாமல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. ஆலையை மூடி ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டது. அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக் கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்" என கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.