2020 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த மூன்று கருப்பு வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் எழுச்சி மிக்க போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தை ஒன்றிய அரசு பல வழிகளில் ஒடுக்கப்பார்த்தது.
ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக கடும் குளிர், மழை, தடியடி, உயிரிழப்புகள் என அனைத்தையும் தாங்கி ஒன்றிய அரசை தங்களது கோரிக்கைக்குப் பணியவைத்தார்கள் விவசாயிகள். இதன் விளைவு மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தியது.
பிறகு பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியான, ராஜஸ்தான் விவசாயிகள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
பிப்.13 நாளை டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை முடக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு போலிஸாரை வைத்து அந்தந்த மாநிலங்களிலேயே விவசாயிகளைக் கைது செய்து தடுத்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஹரியான போன்ற மாநிலங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுத்து வருவதால் டெல்லி எல்லைக்குட்பட்ட அம்பாலா, குருஷ்த்ரா, கைதால், ஜிந்த், ஹிசார் உள்ளிட்ட மாவட்டங்களில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லி எல்லைப்பகுதி முழுவதும் கான்கிரீட் தடுப்புகளும், இரும்பு ஆணிகளைவைத்து விவசாயிகளை ஒன்றிய அரசு தடுப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளது. அதோடு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க பா.ஜ.க அரசு அராஜகமாக நடந்து வருகிறது.
விவசாயிகள் போராட்டத்திற்கான 5 காரணம் என்ன?
1. விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
2.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்
3, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
4. விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
5. லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "நீதி" வழங்க வேண்டும்.