கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரத்தில் எண்ணற்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உண்மை நிலையை மறைப்பதற்காக கொண்டு வரப்பட்டவைதாம்.
குறிப்பாக, இந்திய அரசின் வேலைவாய்ப்பு கணக்கீடுகள் பட்டியலில், இறுதியாக 2011-12 ஆண்டிற்கு முன்னான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. காரணம், வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள தொய்வு.
மக்கள்தொகை வளர்ந்து வரும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் வளராததே முதன்மைக் காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 1999 - 2019 வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பின் வளர்ச்சி 1% ஆக உள்ளது. ஆனால், மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 1.44% அதிகரிக்கிறது.
உலக அளவில் இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2030-ம் ஆண்டிற்குள் 3-வது இடத்திற்கு முன்னேறும் என்று உறுதியளித்திருக்கிறது பாஜக. ஆனால், இந்த வளர்ச்சி என்பது யாரை முன்னிறுத்திய வளர்ச்சியாக இருக்குமென்பதை பாஜக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
ஒன்றியத்தின் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) படி, 2017-18 ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருந்தது. அண்மையில் வெளியிடப்பட்ட CMIE அறிக்கையின்படி, 20 -34 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விழுக்காடு, கடந்த மாதம் வரை உயர்ந்து வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
எனினும், ஒன்றிய அரசின் சில கணிப்புகள், கடந்த இரு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பாக அவர்கள் குறிப்பிடுவது, கல்வி வழியிலான பணியைத் துறந்து, வேளாண் பணிகளில் ஈடுபாடு அதிகரித்துள்ளது என்பதைத்தான்.
வேளாண் பணிகளைப் பொறுத்தமட்டில், நில உரிமையாளர்களுக்கு கிடைக்கிற நிகர இலாபம், உழவர்களுக்கு கிடைக்காது. மேலும், வேளாண்மை பணிகள் என்பது ஆண்டு முழுக்க நிகழ்கிற பணி அல்ல. காலநிலைக்கேற்றது. இது தொடர்பான SAAH அறிக்கையில், இந்தியாவில் உள்ள உழவர்களின் வீட்டு வருமானம் மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அளவில்தான் உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பணவீக்கம் (INFLATION) அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், 10 ஆயிரம் ரூபாயைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது என்பது வாய்ப்பில்லாத செய்தி. இதற்காக, PMGKAY என்ற திட்டத்தின் வழி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவில், 80 கோடி மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது ஒன்றியம். உணவு தானியங்களை ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கும்போது, வேலைவாய்ப்பு மட்டும் எப்படி உயர்ந்திருக்க முடியும்?
வேலைவாய்ப்பில் ஏற்றம் என்ற பாஜகவினரின் கூற்று, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும் வைக்கப்பட்டது. தேர்தலின் போது மட்டும், சிறந்த ஆட்சி எனக் காட்சிப்படுத்தும் செயலாகதான் இந்த கூற்றை பாஜக பயன்படுத்தி வருகிறதே ஒழிய, அதில் உண்மை என்பது எள் முனையளவு கூட இல்லை.
GST போன்ற வரிகள் மூலம் வரலாற்றில் இல்லாத அளவு, பல லட்சம் கோடிகளை ஒன்றிய அரசு பெற்று வந்தாலும் கூட நாட்டின் கடன் குறைந்தபாடில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிதி நெருக்கடியை (4.63%) விட, தற்போதைய பாஜக ஆட்சியில் நிதி நெருக்கடி (5.13%) அதிகரித்துள்ளது.
உலக அளவில் முதலீடுகள் இந்திய நாட்டுக்கு ஈட்டப்படுகின்றன. உலகின் பெரும் பணக்காரர்கள் உருவாகும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. பொருளாதாரமும் ஒரு பக்கம் வளர்கிறது. ஆனால், பொதுமக்கள் மட்டும் இந்த பலன்கள் எதற்குள்ளும் கொண்டு வரப்படாமல், வறுமையில் தொடர்ந்து உழல விடப்படுகின்றனர்.
(பட்ஜெட்டுக்கு முன்னான அல்வா தரும் காட்சி)
இப்படியான ஆட்சியின் இறுதி பட்ஜெட் தாக்கல்தான் நாளை (பிப்ரவரி 1), நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடக்கவிருக்கிறது.