உத்தரப்பிரதேச மாநிலத்தின், அயோத்தி நகரில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி, இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டது. இதனை முன்னெடுத்து நடத்திய ஆர்.எஸ்.எஸ் - பாஜக இயக்கத்தினர், தற்போது அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டி எழுப்பியுள்ளனர்.
மதச்சார்பின்மை மற்றும் அனைவரின் மத நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படை அரசியலமைப்பு விழுமியங்களுக்கு எதிரான அரசியலை மேற்கொண்டு வருகிறது பாஜக.
தேசிய அளவில் ஒன்றிய அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு, பாஜக ஆளுகிற மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் கோவில் திறப்புக்கென விடுப்பு, புதுதில்லி மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுப்பு என ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கடவுளை, நாடு முழுக்க ஏற்க வேண்டும் என்று திணித்து வருகிறது ஆர்.எஸ்.எஸும் அதன் அரசும்.
கடவுளின் பெயரால் நாட்டை காவியாக்க முனையும் இம்முயற்சியை குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில், தற்போது மதத்திற்கும் நாட்டிற்குமான இடைவெளி குறைந்து கொண்டே போகிறது,” என கருத்து தெரிவித்திருக்கிறார்.
“நாட்டின் விடுதலைக்காக, பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்டோரும், மதச்சார்பற்ற பலரும் பங்குபெற்று விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆகவே, மக்கள் அனைவருக்கும் இந்திய சமுதாயத்தில் சம உரிமை உள்ளது,” என பாசிச பாஜவின் நச்சு அரசியலையும் கடிந்திருக்கிறார்.
இந்தியாவில் சகோதரத்துவம் முன்னிறுத்தப்பட்டு, அனைவரின் மதம், மொழி, பண்பாடு ஆகியவை மதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவியலுணர்வு ஊக்குவிக்கப்பட்டு மனிதநேயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்தியாவின் பெரும்பான்மை மக்களை தன் பக்கம் இழுக்க, இந்துத்துவத்தை ஆயுதமாக பயன்படுத்த பாஜக முனைந்தாலும், இந்துவாக இருந்தும் ’இந்துத்துவம் வேறு, இந்து மதம் வேறு’ என தெளிவு கொண்டோரே பெரும்பான்மையிலும் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
தேர்தல் உத்திகள் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் அதிகாரம் போன்றவற்றை கொண்டு மட்டுமே ஆட்சியை நிறுவிக் கொள்வதால், உண்மை பொய்யாகிட முடியாது. பொய்யும் உண்மையாகிட முடியாது.
வரலாறு, பொய்களை வெகுவேகமாய் கட்டுடைத்துக் காட்டும் வலிமை பெற்றது!