மேற்கு வங்கத்தின் நியாயவிலைக் கடைகளில், இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்ட சின்னத்துடன் கூடிய பிரதமர் மோடியின் புகைப்படம் பொருத்தப்படவில்லை. விளைவாக, மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 7000 கோடி நிதி வழங்கப்படவில்லை.
இதே போல, தேசிய சுகாதாரப் பணி திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது தொடர்பாக கடந்த ஆண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கும் பதில் இல்லை.
மேற்கு வங்கம் மட்டுமல்ல, கேரளாவிலும் இதுதான் நிலை. மருத்துவ நெருக்கடி நிலவும் நிலையிலும் கூட, தேசிய சுகாதாரப் பணி திட்ட நிதியை கேரளத்திற்கு வழங்கவில்லை என அண்மையில், கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒன்றிய அமைச்சகத்தின் அறிக்கையின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், அச்சுத் துறைக்கான விளம்பரங்களுக்கு மட்டும் சுமார் ரூ.967.46 கோடி ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது. இவை தவிர மற்ற ஊடக விளம்பரங்களுக்கு இன்னும் அதிக தொகை செலவிடப்பட்டிருக்கலாம் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
எனினும் மக்களின் அடிப்படை தேவையான மருத்துவத்திற்கு கூட நிதி ஒதுக்கப்படாதது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அரசின் திட்டங்களில் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், அரசு உடைமைகளிலும் காவியை பூச முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக. மேற்கு வங்கத்தின் கல்வி நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள் ஆகியவற்றிற்கு காவி வண்ணம் தீட்ட நடவடிக்கை எடுத்துள்ளது ஒன்றிய அரசு.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா, “இக்கட்டடங்கள் 2011-ம் ஆண்டிலிருந்து புழக்கத்தில் உள்ளன. மாநில வண்ணமான நீலம் மற்றும் வெள்ளை அவற்றுக்கு பூசப்பட்டுள்ளன. இவை இரண்டுமே அரசியல் வண்ணங்கள் அல்ல. இந்த நிலையில் அந்தக் கட்டடங்களின் வண்ணத்தை, இந்துத்துவத்தின் நிறமான காவி கொண்டு ஒன்றிய அரசு மறைக்க பார்ப்பது, எந்த வகையில் சரி?,” என்று கேள்வி கேட்டுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படுகிற கட்டடங்களிலும் அலுவலகங்களிலும் மோடியின் படங்கள் பொறிக்கப்பட்டு, இந்தியாவிற்கே காவி பூச நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் இச்செயல்பாடுகள் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.