குடும்ப சண்டை, வரதட்சணை, காதல் விவகாரம் போன்ற பிரச்சனைகளால் நடக்க இருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதைப் பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் நல்லி எலும்பு இல்லாததால் நடக்க இருந்த திருமணம் ஒன்று நின்று போனது என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. அப்படி ஒரு சம்பவம் தான் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஜக்தியாலை பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து பெண் வீட்டார் மணமகன் வீட்டாரின் குடும்பத்திற்குப் பாரம்பரிய முறைப்படி அசைவ உணவு விருந்து கொடுத்துள்ளனர். அப்போது இந்த விருந்தில் நல்லி எலும்பு இல்லை என மணமகன் வீட்டார் பிரச்சனை செய்துள்ளார்.
பின்னர் அவர்களைப் பெண் வீட்டார் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் இப்பிரச்சனையைப் பெரிதாக்கிக் கொண்டே சென்றனர். எவ்வளவு சமாதானம் செய்தும், தங்களை நீங்கள் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.