இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மசோதா மீதான விவாதம் நடக்க இருந்த நிலையில், மக்களவையில் எம்பிக்கள் பகுதிக்குள் 2 இளைஞர்கள் நுழைந்து புகை குண்டு வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தியதால், 146 எம்பிக்கள் இரு அவைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றவே இத்தகைய நடவடிக்கை திட்டமிட்டு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.அதேபோல, எதிர்க்கட்சிகளே இல்லாமல் 3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், குற்றவியல் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட 4 நாட்களிலேயே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளன.