மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது அந்தேரி என்ற பகுதி. இங்கு ஷபீர்கான் - சானியா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தையும், பிறந்து ஒரே மாதம் ஆன பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சூழலில் இவர்கள் போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் அவர்கள் போதை எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது அவர்களிடம் பணம் இல்லை என்ற காரணத்தினால், பணத்திற்காக பல்வேறு வழிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால் போதைப்பொருள் வாங்கும் அளவிற்கு தேவையான பணம் அவர்களிடம் கிடைக்கவில்லை. இந்த சூழலில் உஷா ரத்தோர் என்ற ஏஜெண்ட் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் இந்த தம்பதிக்கு பணத்தாசை காட்டவே, அவர்களும் தங்கள் குழந்தைகளை விற்க முன்வந்துள்ளனர்.
அதன்படி ஆண் குழந்தையை ரூ,60 ஆயிரம், 1 மாத பெண் குழந்தையை ரூ.14 ஆயிரம் என தங்களது 2 பிள்ளைகளையும் ரூ. 74,000 பணத்துக்கு இவர்கள் விற்றுள்ளனர். பிள்ளைகளை விற்ற சம்பவம் குறித்து ஷபீர்கானின் சகோதரி ரூபினா கானுக்கு தெரியவரவே, அவர் இதுகுறித்து குடும்பத்தாரிடம் சண்டையிட்டு, போலீசிலும் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷபீர்கான் - சானியா தம்பதி, ஏஜெண்ட் உஷா, குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகீல் மக்ரானி ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால், குழந்தைகளை விற்றது தெரியவந்தது. தொடர்ந்து குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் 1 மாத பெண் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், 2 வயது ஆண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.