கேரளா மாநிலம் திரூரைச் சேர்ந்தவர் பிரதிபா. இவர் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு மூதூரில் உள்ள ஒரு பரோட்டா கடையில் நான்கு பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து அவர் ஆர்டர் செய்த நான்கு பிரியாணிகளும் வீட்டிற்கு வந்துள்ளது. பிறகு முதல் இரண்டு பாக்கெட் பிரியாணிகளை அவரது குழந்தைகள் சாப்பிட்டு முடித்துள்ளனர்.
பிறகு பிரதிபா மூன்றாவது பாக்கெட்டை திறந்தபோது அதில், சுத்தம் செய்யப்படாத கோழி தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் அந்த பரோட்டா கடைக்குத் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் திரூர் நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக் காலங்களாகவே இந்தியா முழுவதும் பரவலாக உணவகங்கள் மற்றும் பார்சல் உணவுகளில் இப்படிக் கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் பல்லி, கரப்பான் பூச்சி இருக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது உணவு பரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.