ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் செக்டர் 9-ல் வசித்து வருபவர் ரிஷப் ஷர்மா (27). காய்கறி வியாபாரம் செய்து வந்த இவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் இவரது வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் இவர் வேறு வேலை செய்ய நினைத்துள்ளார். ஆனால் அது எதுவும் சரியாக கைக் கொடுக்கவில்லை என்பதால் தனது பழய நண்பர் ஒருவரது உதவியை நாடியுள்ளார்.
அந்த நபரோ ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஏமாற்று வேலைகளில் பெரிதாக சம்பதிக்கலாம் என்று எண்ணிய இவரும், அவரது நண்பரின் வழியை பின்பற்றியுள்ளார். அதன்படி ரிஷப் ஷர்மாவும் ஏமாற்று வேலையை தொடங்கியுள்ளார். தொடர்ந்து மேரியட் போன்வாய் (Marriott Bonvoy) என்ற போலியான ஹோட்டல் பெயரில் marriottwork.com என்ற போலியான இணையதளத்தை உருவாக்கினார்.
மேலும் அதில் வீட்டில் இருந்தே பணி புரியலாம் என்று ஆசை வாரத்தை கூறி மக்களை ஈர்த்தார். தொடர்ந்து இதனை பார்த்து சிலர் அணுகியுள்ளனர். அவர்களுக்கு வேலை ஹோட்டல், லாட்ஜ் போன்றவற்றுக்கு நல்ல ரிவியூ வழங்குவதும், கூகுளில் பதிவேற்றுவதும்தான். இதனால் பலரும் அணுகியுள்ளனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து இவர் தனது இந்த தொழிலில் சில நபர்களை கூட்டு சேர்த்துள்ளார். அதில் சோனியா என்ற பெண்ணும், பலரையும் பேசி இந்த பணிகளில் ஈடுபட செய்துள்ளார். தொடர்ந்து மேலும் சம்பாதிக்க வேண்டுமென்றால் முதலீடு செய்ய வேண்டும் என்று டெலிகிராம் பக்கத்தில் இணைத்துள்ளார். இவர்களை நம்பி அதில் பலரும் முதலீடு செய்துள்ளனர்.
முதலீடு செய்த சில நாட்களில் அவர்களது இணைப்பை துண்டித்துள்ளனர். இவ்வாறு சுமார் 6 மாதமாக செய்து ரூ.21 கோடி வரை மோசடி செய்துள்ளது இந்த கும்பல். இந்த பணத்தையெல்லாம் வேறு வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்யும்போது ஏற்பட்ட சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ரிஷப் ஷர்மா மீது ஏற்கனவே தெலங்கானா, குஜராத், பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 37 மோசடி புகார் இருக்கிறது. அதோடு இந்த ஆன்லைன் மோசடி திட்டங்களில் சீனா, ஹாங்காங், துபாய், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் செயல்படும் கிரிமினல் கும்பலுடன் இவர் தொடர்பு வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது
வெறும் 6 மாதங்களில் ரூ.21 கோடி வரை மக்களிடம் ஏமாற்றி மோசடி செய்த இளைஞர் ரிஷப் ஷர்மா, கடந்த 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் மோசடி தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.