வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்க பன்னாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு ஐ.சி.எஃப் ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுவரை வந்தே பாரத் ரயிலை தாங்கள் தயாரித்த நிலையில், தற்போது தனியாருக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாகவும், ரயில் பெட்டி தயாரிப்புக்கு ஐ.சி.எஃப். நிறுவனம் முழுவதையும் அவர்கள் பயன்படுத்தி கொள்ளவுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரயில் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள், இடம் உள்ளிட்ட அனைத்தையும் நம்மிடமே பெற்று கொண்டு, எந்த முதலீடும் இல்லாமல் லாபம் சம்பாதிக்க உள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.சி.எஃப்., ஊழியர்களால் 70 கோடி ரூபாயில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும் நிலையில், பன்னாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒரு ரயிலுக்கு 120 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், 200 ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் மற்றும் முறைகேடு அரங்கேறியுள்ளதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், ஐ.சி.எஃப். ஊழியர்களால் மட்டுமே வந்தே பாரத் ரயிலை தயாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.