சீனாவிடமிருந்து ‘நியூஸ் கிளிக்’ நிறுவனம் நிதி பெற்றதாக ஆதாரமற்ற செய்தியை அமெரிக்காவின் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ என்ற ஊடக நிறுவனம் பொய்ச் செய்தி ஒன்றை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதனடிப்படையில், 2021 செப்டம்பரில் ‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகத்தில் சோதனையிட்ட அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்குச் சொந்தமான ரூ. 4.5 கோடி மதிப்பிலான வீட்டையும் ரூ. 41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையை யும் முடக்கியது.
இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 3ம் தேதி ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களுக்குச் சொந்தமான 100 இடங்களில் 12 மணிநேர சோதனை நடத்திய டெல்லி காவல்துறை, செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. ‘நியூஸ் கிளிக்’ ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் 9 பேரிடம், 25 கேள்விகள் அடங்கிய பட்டியலைக் கொடுத்து விசாரணை நடத்தியது.
முன்னதாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் ‘உபா’ (UAPA) சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்த, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, 12 மணிநேர சோதனை, விசாரணைக்குப் பின், ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மனிதவள பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை இரவு கைது செய்தது.
‘நியூஸ் கிளிக்’ மீதான தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘இந்தியா’ கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்களின் தேசிய கூட்டமைப்பு, டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மற்றும் கேரளா யூனியன் ஆப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் உள்ளிட்ட அமைப்புக்கள், ‘இது மோடி அரசின் ஒடுக்கு முறை’ என்று கண்டனம் தெரிவித்துள்ளன.
அதோடு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற PM CARESஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் சீனாவுக்குஆதரவாக செயல்படுவது மோடி அரசுதான் என காங்கிரஸ் நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், "சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 20 முறை மோடி சந்தித்திருக்கிறார். ஜூன் 19, 2020 அன்று எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தை பற்றியும் அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை.PM CARES-க்கு சீன நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியளிக்கவும் மோடி அனுமதித்தார். ஆக வெளிநாட்டு சக்திகளால் கட்டுப்படுத்தப்படுவது யார்?" என கேள்வி எழுப்பி குற்றம்சாட்டியுள்ளார்.