உத்தர பிரதேச மாநிலம் கர்ஹால் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்குக் காய்ச்சல் காரணமாக 17 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சிறுமிக்கு ஊசி ஒன்று செலுத்தியுள்ளார்.பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
அவரது உயிர் ஆபத்தான நிலைக்கு சென்ற பிறகு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் உறவினர்களை வற்புறுத்தியுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், "எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்" என அழுதுகொண்டே கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களை வெளியே விரட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளது. இதற்குள் சிறுமி உயிரிழந்துவிட்டார். பிறகு மருத்துவமனை ஊழியர்கள் சிறுமி உடலை உடற்கூறு ஆய்வு எதுவும் செய்யாமலும், ஆம்புலன்ஸ் வர வைக்காமலும் வெளியே இருந்த இருசக்கர வாகனத்தில் அமரவைத்து விட்டு சென்றுவிட்டனர். மருத்துவமனையில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த கொடூர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.