ராணுவத்தில் பணியாற்றிவந்த ஷினே குமார் என்பவருக்கு தான் பிரபலமான வேண்டும் என எண்ணம் நீண்ட நாள் இருந்துள்ளது. இதனிடையே இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா சேர்ந்து அங்குள்ள தனது நண்பரை சந்தித்துள்ளார்.
அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினரை (PFI) வைத்து தான் பிரபலமடையலாம் என கருதி, தனது நண்பருடன் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி, நண்பரை வைத்து தன்னை தக்கவைத்து அவர், கத்தியால் தனது சட்டையையும் கிழித்துள்ளார்.
அதோடு நிற்காதவர் தனது முதுகில் பச்சை பெயிண்ட்டை வைத்து தனது நண்பர் மூலம் `PFI' என்று எழுதியுள்ளார். மேலும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தன்னை தாக்கி தனது முதுகில் PFI' என்று எழுதியதாக தனது ராணுவ உயர் அதிகாரிகளிடமும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து ராணுவம் சார்பில் மாநில காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நடத்திய விசாரணையில் நண்பரோடு சேர்ந்து அந்த ராணுவ வீரர் நாடகமாடியது தெரியவந்தது. மேலும், இந்த செயலுக்கு பயன்பட்ட, பச்சை நிற பெயின்ட், பிரஷ், சட்டையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவையும் ராணுவ வீரரின் நண்பர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர் மற்றும் அவரின் நண்பர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலமாக வேண்டும் என்று ராணுவ வீரர் செய்த இந்த செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.