சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ஒருவர் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையாரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி புகார் கொடுத்தார். அதாவது, ‘filmcinemaads’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக பல பதிவுகளை பகிர்ந்துள்ளதாகவும், மேலும் அந்த மர்ம நபர், தான் ஒரு பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஏஜென்டாக பணிபுரிவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்த மர்ம நபரை பலரும் தொடர்பு கொண்டு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர். இதனால் அந்த மர்ம நபர், தனது வாட்சப் எண்ணை அவரை தொடர்பு கொள்பவர்களிடம் கூறி, நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி UPI மூலம் பணம் பெற்று வந்துள்ளார். அந்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னை பெருநகர காவல் ஆணையார் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மோசடி நபரின் Paytm கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள், முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மோசடி வங்கி கணக்கிலிருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தபட்டு, ஏடிஎம் பண பரிவர்த்தனை காட்சிகள் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பெறப்பட்டன. மோசடி நபர் பயன்படுத்திய தொலைபேசி எண்ணின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது எனவும், மோசடி நபர்கள் கடலூரில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டதில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சுதாகரன் (26) மற்றும் புகழேந்தி (20) ஆகியோர் திட்டக்குடியில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை அவர்களிடமிருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருப்பூர், அடையாறு மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மேலும் மூன்று வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நடிக்க வாய்ப்பு தருவதாக இந்த கும்பல் 2022ஆம் ஆண்டு முதல் மோசடியில் ஈடுபட்டு வந்த இவர்கள் 40க்கும் மேற்பட்டவர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிரபல நிறுவனங்களில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் வரும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறும் பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.