தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்திற்குட்பட்ட நென்னல் மண்டல் பகுதியில் அரசு நடத்தும் கிராம வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி குடியிருப்பு வீட்டில் செயல்பட்டு வருவதுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.
இந்நிலையில் கடந்த வியாழனன்று வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த போலிஸார் வங்கிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் வங்கிக்குள் உள்ள அறைகளில் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் வங்கியிலிருந்து எந்த பணம் திருடப்படவில்லை.
மேலும் போலிஸாருக்கு அங்கு ஒரு தினசரி பத்திரிகையின் மேல் எழுதப்பட்டிருந்த குறிப்பு கிடைத்தது. இதில் "என்னால் ஒரு ரூபாய் கூட திருடமுடியவில்லை... அதனால் என்னைப் பிடிக்காதீர்கள். என் கைரேகைகள் இருக்காது. நல்ல வங்கி" என்று எழுதியிருந்தது. இது வங்கிக்குக் கொள்ளையடிக்க வந்துவிட்டு முடியாமல் முகமூடி அணிந்து வந்த நபர் எழுதி வைத்துவிட்டுச் சென்றது என்பதை போலிஸார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து இந்த வங்கி கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து முகமூடி திருடனைப் பிடிக்கத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.