மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் அமைந்துள்ளது பெசா - பிப்லா என்ற சாலை. இங்கு அதர்வா நக்ரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. பலரும் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் தம்பதி ஒருவரும் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் இவர்கள் திடீரென தங்களது வீட்டை காலி செய்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால், மின் இணைப்பை துண்டிப்பதற்காக மின்சார ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென ஏதோ சிறுமி கத்துவது போல் கேட்டுள்ளது. எனவே அந்த வீட்டின் ஜன்னலில் காதுகளை வைத்து அந்த ஊழியர்கள் கேட்டபோது சிறுமி ஒருவர் உள்ளே இருந்து "காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.." என்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனை கேட்டதும் அதிர்ந்த அவர்கள், அக்கம்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கே 10 வயது சிறுமி ஒருவர் பாத்ரூமில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் சிறுமியை மீட்டபோது, அவரது உடலில் தீ காயங்கள் உட்பட கடுமையான காயங்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் அந்தரங்க உறுப்பு உட்பட உடலில் பல காயங்கள் உள்ளன என்றனர். இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமி அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்ததும், அப்போது அந்த குடும்பத்தினர் அவரை சித்திரவதை செய்ததும் தெரியவந்தது. மேலும் வீட்டை அவர்கள் காலி செய்து போகும்போது இவரை அழைத்து செல்ல வேண்டாம் என்று எண்ணி, அவரை பாத்ரூமில் அடைத்ததோடு சாப்பிட வெறும் பிரட் மட்டும் கொடுத்து விட்டு சென்றுள்ளதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் யார் என்று தொடர்ந்து விசாரிக்கையில் அந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் தஹா அர்மான் இஸ்தியாக் கான் - ஹீனா தம்பதி என்று தெரியவந்தது. பின்னர் அவர்கள் தற்போது எங்கே இருக்கின்றனர் என்று விசாரித்து அர்மான் இஸ்தியாக் கான் - ஹீனா தம்பதியோடு சேர்த்து ஹீனாவின் சகோதரன் அசார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், அச்சுறுத்தல், தாக்குதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.