ஆண்டுதோறும் இந்தியாவில் ரக்ஷபந்தன் என்று சொல்லப்படும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பண்டிகையின்போது, சகோதரிகள், தங்கள் சகோதரருக்கு (அண்ணன் / தம்பி) ராக்கி என்று சொல்ல கூடிய கயிறை கையில் கட்டிவிடுவர்.
இந்த பண்டிகைக்காக பலரும் காத்திருப்பர். பல வாரங்க்ளுக்கு முன்னே இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் எல்லாமே நடைபெறும். இது சகோதரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். இந்த சூழலில் தனக்கு ராக்கி கயிறு கட்டுவதற்கு தம்பி வேண்டும் என்று சிறுமி கேட்டதால், பெற்றோர் குழந்தை ஒன்றை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி தாகூர் கார்டன் நகரில் ரகுபீர் நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குப்தா (41) - அனிதா குப்தா (36) தம்பதி. டாட்டூ கலைஞராக சஞ்சய் இருக்கும் நிலையில், அவரது மனைவி அனிதா மெகந்தி கலைஞராக இருந்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். இருவரும் அந்த பகுதி பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், மகன் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்தார். தனது சகோதரன் பிரிவை தாங்க முடியாமல் சிறுமி மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்த சூழலில் நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தனக்கு சகோதரன் வேண்டும் என்று சிறுமி கூறியுள்ளார். இதற்காக சிறுமி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மன வேதனையில் இருக்கும் தங்கள் மகளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்பதால் அவரது ஆசையை நிறைவேற்ற பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று சட்டா இரயில் சவுக் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் தம்பதி ஒருவரின் 1 மாத குழந்தையை திட்டம்போட்டு கடத்தியுள்ளனர். தங்கள் குழந்தையை காணவில்லை என்று அந்த தம்பதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு தம்பதி பைக்கில் வந்து குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து குழந்தையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கி கயிறு கட்ட தம்பி வேண்டும் என்று மகள் கேட்டதால், சாலையோரம் இருந்த 1 மாத குழந்தையை கடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.