ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்குக் கடந்த 20ம் தேதி விரைவு ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலின் எஸ் 2 பெட்டியில் உள்ள கழிப்பறை உள்பக்கமாகப் பூட்டியே இருந்தது.
மேலும் கழிவறைக்குள் யாரோ இருக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. பயணிகள் கழிவறையைத் திறக்க முயற்சி செய்தும் முடியவில்லை.
பின்னர் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்துள்ளனர். இவர் வந்து பார்த்தும் கழிப்பறை திறக்கவில்லை. அதற்குள் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைக் கடந்து அரக்கோணத்திற்கு வந்தது.
அப்போது அந்த கழிவறையில் இருந்து மீண்டும் சத்தம் வந்துள்ளது. இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் கழிவபறை கதவை உடைத்து உள்ளே பார்த்த போது வாலிபர் ஒருவர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரை வெளியே அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோகன் தாஸ் என்பது தெரியவந்தது. இவர் பயணச் சீட்டு எடுக்காமல் மூன்று நாட்கள் கழிப்பறைக்குள் அமர்ந்து கொண்டு வந்தது தெரிந்தது. மேலும் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவந்ததால் அவரிடம் மேலும் தீவிரமாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.