பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மிகவும் பிற்போக்கான செயல்முறைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் அவதூறு பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டுவரும் நிலையில், பழங்குடி மற்றும் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கையிலும் பாஜக மும்முரமாக இருக்கிறது.
அந்த வகையில், பாஜக ஆளும் ஹரியானாவில் வனத்துறை வேலைவாய்ப்புகளில் உடல் தகுதி அளவுகோளாக பெண்களில் மார்பளவு கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹரியானா பணியாளர் தேர்வு ஆணையம் சரகர், துணை சரகர் மற்றும் வனவர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பில், பெண் தேர்வர்களின் மார்பளவு வேண்டும் என்ற விதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெண்களின் மார்பகங்கள் விரியாத நிலையில் 74 செ.மீ. அளவும் விரிந்த நிலையில் 79 செ.மீ. அளவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையான நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மார்பக அளவு விவகாரம் குறித்து மூன்று பெண்கள் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மார்பகம் மற்றும் மார்பகத்தின் விரிவாக்கம் உடற்தகுதி தேர்வுக்கு அவசியமாக இருக்கவேண்டியதில்லை. அப்படியே பரிந்துரைத்தாலும் அது ஒரு பெண்ணின் தனியுரிமையில் தலையிடுவதாகவே இருக்கும்.
இத்தகைய உடற் தகுதி அளவீடுகள் தன்னிச்சையானது மற்றும் மூர்க்கத்தனமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கப்பட்டுள்ள பெண்ணின் கண்ணியம், தனியுரிமையை இது மீறுவதாக இருக்கிறது. வனக்காவலர் பணியாக இருந்தாலும், வேறு எந்த வேலையாக இருந்தாலும் மனிதாபிமானமற்ற இந்த விதிகளை அரசு மறு ஆய்வு செய்யவேண்டும். போலீஸ் போன்ற வேலைகளுக்கு இதுபோன்ற அளவீடுகள் தேவையற்றது" என்று கூறியுள்ளது.