ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமான (சிஏஜி) அறிக்கை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உயிரிந்த 3,446 நோயாளிகள் சிகிச்சை பெற்றதாகக் கூறி மருத்துவமனைகள் 6.97 கோடி ரூபாய் அரசிடமிருந்து இருந்து பணம் பெற்றுள்ளதாக சிஏஜி கூறியுள்ளது.
முன்னதாக, பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்திருந்தது.
டெல்லி - ஹரியானா குருகிராமை இணைக்கும் வகையில் உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலை நெடுஞ்சாலை கட்ட முடிவு செய்யப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிமீ நீளத்திலும், டெல்லியில் 10.1 கிமீ நீளத்திலும் ஒற்றைத் தூண்களில் விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான ஒப்புதல் தரப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 14 மடங்கு அதிக செலவு செய்துள்ளதாகவும், ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18.20 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதேபோல் பாரத் மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மற்ற திட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 58 சதவிகிதம் அதிகம் செலவாகியுள்ளதாகவும் சிஏஜி தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்திலும் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி கூறியிருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.