நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடரின் மணிப்பூர் வன்முறை குறித்த விவாதத்திற்கு இடையே 23 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின் மூலம் பா.ஜ.க அரசின் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்த துவாரகா துரித நெடுஞ்சாலை செலவு ரூ.250 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திட்டத்தின் செலவு ரூ.528.8 கோடியாக இருந்தது. ஆனால் பின்னர் ரூ.7287.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சிஏஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "நரக நெடுஞ்சாலைக்கு இட்டு செல்லும் பாஜக ஊழல்.
மோடி அரசாங்கம் மீதான CAG அறிக்கை பாரத் மாலா திட்டத்தில் முறைகேடுகளை சுட்டிக் காட்டியிருக்கிறது. துவாரகா துரித நெடுஞ்சாலை இந்த முறைகேட்டின் உண்மையை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
இத்திட்டத்தின் செலவாக முதலில் கணக்கிடப்பட்ட 528.8 கோடி ரூபாய் 7287.2 கோடியாக அதிகரித்திருக்கிறது. 1278% உயர்வு. எந்தவித விரிவான திட்ட அறிக்கையும் இன்றி இத்திட்டம் ஏற்கப்பட்டது. திட்டமிடப்பட்ட சுங்கக் கட்டணம் திட்டச்சலவை மீட்காது. பயணிகள் மீது நிதிச்சுமையை ஏற்றும்.
துரித நெடுஞ்சாலையின் பாதைகள், உள்கட்டுமான அமைப்பு ஆராயப்படாமல் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமற்ற முறைகளை கொண்டு கட்டுமானம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் ஊழலை பற்றி பேசுவதற்கு முன் உங்களுக்குள் ஆராயுங்கள் பிரதமரே! 2024ம் ஆண்டில் INDIA, இந்த முறைகேடுகளுக்கு உங்களின் அரசாங்கத்தை பொறுப்பாக்கும்" என தெரிவித்துள்ளார்.