புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் செயலில் உள்ள அனைத்து புகைப்படங்களை மர்ம நபர் ஒருவர் லைக் செய்து, அவருக்கு மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதை நிர்வாண கோலத்தில் சித்தரித்து அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு அதில் நிர்வாணமாக வீடியோ கால் வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அப்படி வீடியோ கால்க்கு வரவில்லை என்றால் நிர்வாண படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுகுறித்து சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பிய நபரின் ஐடி மற்றும் செல்போன் எண் மூலம் அவரை டிராக் செய்தனர்.
அதில், அந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பதும், டிப்ளமோ படிப்பில் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், அவருக்கு திருமணமானதும், இவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது,
தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் விக்னேஷ் வைத்திருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ததில், பல பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்ததும், இதற்காக செல்போனில் பல செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து போலிஸார் சிறையில் அடைத்தனர்.