பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தக்காளி விலை குறைக்க ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் விலை உயர்வால் தக்காளிக்கே போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என பலரும் கிண்டல் அடித்து வரும் நிலையில் பல இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் உத்தர பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் தக்காளிக்கு பாதுகாவலராக 2 பவுன்சர்சை நியமித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் நேற்று கர்நாடகாவில் தக்காளி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவரை திருடர்கள் கத்தியால் குத்தி விட்டு தக்காளியுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, தற்போது தக்காளி அதிகம் விற்பனை செய்து லாபம் ஈட்டிய ஆந்திர விவசாயி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் மதனபள்ளி அருகேயுள்ள போடிமல்லாடினா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. விவசாயியான இவர், தனது நிலத்தில் பல்வேறு காய்கறிகள் விதைத்துள்ளார். அந்த வகையில் இந்த முறை தனது 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரிப்பால் இவரும் தனது வியாபாரத்தை தொடங்கினார். 20 நாளில் சுமார் ரூ.30 லட்சம் வரை தக்காளி விற்று லாபம் பார்த்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை தக்கி தாக்கி விடு அவரிடம் இருந்த பணத்தை பிடிங்கி அவரது கை, கால்களை கட்டிப் போட்டு தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போதும் அவரிடம் ரூ.30 லட்சத்துக்கான ரசீது இருந்துள்ளது. இதனால் அவர் பணம் வாங்கியதை கண்ட நபர்கள் பின்தொடர்ந்து தாக்கி விட்டு பணத்தை தூக்கி சென்றனரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.