பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஷப். கல்லூரி மாணவரான இவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இவருக்குச் சிறுமி ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் பேசி வந்துள்ளனர்.
இதையடுத்து அச்சிறுமி ரிஷப்பை நேரில் சந்திக்கும்படி கூறியுள்ளார். பின்னர் அவர் பாட்னாவில் உள்ள பெண் நண்பரைச் சந்திக்கச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர் அங்குச் சென்றபோது ரிஷப்பை அச்சிறுமி மூன்று பேருடன் சேர்த்துக் கடத்தி சென்றுள்ளார். பிறகு அவரது குடும்பத்திற்கு தொலைப்பேசியில் அழைத்து, "மகனைக் கடத்தியதாகவும் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவேன்" என மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரிஷப் பெற்றோர் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார் விசாரித்தபோது ரிஷப் பாட்னாவில் இருப்பது தெரியவந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிதான் அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அங்குச் சென்ற போலிஸார் ரிஷப்பை மீட்டு சிறுமி மற்றும் அவருக்கு உதவிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.