தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணையமாக மாறிவிட்டது. இதில் எவ்வளவு நல்லது இருக்கிறதோ அந்த மோசமான விஷயங்களும் உள்ளது. நாம் அனைத்தும் இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடிகிறது. குறிப்பாக ஆப்கள் மூலம் நமக்கு தேவையானவற்றை ஆன்லைன் மூலமே பெற்று கொள்ள முடிகிறது.
மேலும் சிலர் ஆன்லைன் வாயிலாக பார்ட் டைம் வேலை தருவதாக கூறியும் பண மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரே நாளில் சுமார் 9 பேரிடம் இணையவழி மூலம் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் மர்ம நபர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
புதுச்சேரியில் இணையவழி மூலம் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த பலரும் சிக்கி தவிக்கின்றனர். இணையவழி போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனை காதில் வாங்காமல் உள்ளனர். இதனிடையே இணையவழி மோசடிக்காரர்கள் தற்போது பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.
புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளார். அப்போது அவரது செல்போனில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைனில் அழகிய பெண்களிடம் பேசலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெண் ஆசையால் அந்த வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்றுள்ளார். அப்போது அதில் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கட்டணம் செலுத்தி சென்ற பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்த பணமும் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்த வாலிபர் சைபர் க்ரைமில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் இன்று ஒருநாளில் மட்டும் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டில் வேலை, கொரியரில் பொருட்கள் வந்துள்ளது. பேன் கார்டு அப்டேட் என கூறி, புதுச்சேரியை சேர்ந்த 9 பேரிடம் சுமார் 6 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இணைய வழியில் அதிக லாப முதலீடுகள், வேலைவாய்ப்பு அல்லது வங்கிகளில் இருந்து, கொரியர்களில் இருந்து வரும் அழைப்புகளையும் உறுதி செய்யாமல் ஏற்க வேண்டாம் என இணைய வழி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.