கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்குக் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சௌமியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.
இதையடுத்து பத்தனம் திட்டா குடும்ப நல நீதிமன்றத்தில் சௌமியா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ஜெயபிரகாஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருவல்லா நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து ஐந்து வருடமாக இந்த விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து வருடங்களும் வழக்கு விசாரணையின் போது மங்களூருவில் இருந்து திருவ்வலாவிற்கு ஜெயபிரகாஷ் வந்து செல்கிறார்.
மேலும் வழக்கறிஞர் யாரையும் தனியாக வைத்துக் கொள்ளாமல், அவரே வாதாடி வந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து வழக்கில் இவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் நீதிமன்றத்தின் வெளியே நின்று இருந்த நீதிபதியின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.