வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.
இந்த வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும், பா.ஜ.க அரசியலும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வன்முறையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் மிசோரம், அசாம் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி அமெரிக்கா செல்லலாமா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கிடையில் மணிப்பூர் வன்முறைச் சம்பவம் இந்தியத் தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது என சோனியா காந்தி வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க ஜூன் 24ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டில் இல்லாத போது மணிப்பூர் விவகாரம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டமா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்துப் பேசிய ராகுல் காந்தி, 50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். மணிப்பூர் வன்முறை தொடர்பாகப் பிரதமர் நாட்டில் இல்லாத போது அனைத்துக்கட்சி கூட்டமா?. மணிப்பூர் வன்முறை தொடர்பாகக் கூட்டப்பட்டுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமருக்கு முக்கியமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.