கர்நாடக மாநிலம் துமகூரு என்ற பகுதியை அடுத்துள்ள குப்பி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம் - சுனிதா தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் நேத்ரா என்ற மகள் உள்ளார். அந்த பகுதியில் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்த சூழலில் இவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இவரை கண்டித்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞரையும் அழைத்து எச்சரித்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களில் நேத்ரா தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் கதறி அழுதனர். கடந்த ஜூன் 9-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுமிக்கு இறுதி சடங்கும் நடத்தி உடலை எரித்து விட்டனர்.
காதலி இறந்தது குறித்து காதலன் அறியவே, அவர் உடனே இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் எரிந்த உடல் பாகங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். அப்போது சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து பெண் வீட்டாரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தங்கள் மகளை தானே கொன்றதாக தந்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், நேத்ரா வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதால் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் அவருடன் இருந்த உறவை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளார். இதனால் அவர்கள் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவருடன் சிறுமி நேத்ராவுக்கு கடந்த மே மாதம் நிச்சயம் செய்து வைத்துள்ளனர்.
இன்னும் 3 மாதத்தில் நேத்ராவுக்கு 18 வயதாகிவிடும் என்பதால் அப்போது திருமணம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் பயந்துபோன நேத்ரா கடந்த ஜூன் 7-ம் தேதி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும் அன்றைய இரவே நேத்ராவை பிடித்து குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.
அவரை வீட்டுக்குள் விடாமல் மாட்டு தொழுவத்தில் கட்டி போட்டுள்ளனர். தொடர்ந்து நேத்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து கொலை செய்த தந்தை, மாமா, சகோதரன், தாய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 17 வயது மைனர் பெண்ணை ஆணவ கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.