மத்திய பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்திற்குட்பட்ட முகவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி. இவரது 2 வயது மகள் ராகுல் குஷ்வாஹாலி. இவர் கடந்த 6ம் தேதி வீட்டின் அருகே உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூடப்பாத இருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதுபற்றி அறிந்த உடனே போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் குழந்தையை மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்தினார். இதையடுத்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து குழந்தையை உயிருடன் மீட்கும் பணியில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில் ஆழ்துளைக் கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்குச் சென்றது. இதனால் பள்ளம் தோண்டும் பணி கைவிடப்பட்டது.
இருப்பினும் குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுத்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. பின்னர் ரோபாட்டீக்ஸ் நிபுணர்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.