ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் ஒரே பாதையில் வந்ததால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
அதோடு, இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 - 8 பெட்டிகள் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த பாதையில் விழுந்துள்ளது. அப்போது அந்த பாதையில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் இந்த ரயிலின் மீது மோதியதாகவும் யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 - 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும்.
மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம் அறிந்து முதலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்புப்பணியில் உடனடியாக களமிறங்கினர். அதோடு சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் உடனடியாக அந்த பகுதிக்கு மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் பயணம் செய்த ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். மேலும், ரயில் பெட்டிகளும் பயங்கர சேதமடைந்துள்ள நிலையில், அதில் ஏராளமானோர் சடலமாக மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதோடு படுகாயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் தற்போதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளாதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தகவலை ஒடிசா தலைமை செயலரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விபத்து நடைபெற்றுள்ள இடத்துக்கு ராணுவத்தினரும் மீட்புபணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த கொடூர விபத்து கடந்த 19 ஆண்டுகளில் உலகளவில் பதிவான மோசமான விபத்தாக கருதப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமியில் இலங்கையில் மாதாரா எக்ஸ்பிரஸ் ரயில் சுனாமி அலைகளில் சிக்கிக்கொண்டது.
இதில் சுனாமி அலைகள் ரயிலை இழுத்துச்சென்றதிலும், ரயில் முழுக்க கடல் நீரால் நிரம்பிய நிலையிலும் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த ரயிலில் பயணம் செய்த 1,700 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சில அதிகாரபூர்வமற்ற கணக்குகளின் படி இந்த ரயிலில் பயணம் செய்திருந்த 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்டது.
உலக வரலாற்றில் மிகவும் மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த ரயில் விபத்துக்கு பிறகு தற்போதுவரை 19 ஆண்டுகளில் மோசமாக ரயில் விபத்தாக இந்த ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. சமீபத்திய அறிவிப்பின் படி 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.