ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று கேராமான ரயில் விபத்து நடந்தது. இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியது. பின்னர் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் மோதியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக் கொண்டதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தவறான சிக்னல் கொடுத்தால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளைத் தவிர்க்க ‘Kavach’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) அமைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என அகில இந்தியத் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து. ரயில்வே துறையில் ஒருங்கிணைப்பு இல்லை. விபத்து தடுப்பு கருவிகள் முறையாகப் பொருத்தாமல் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது" என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், "ரயில்வே துறையின் அலட்சியமே இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணம். இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி தவறுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்" என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? இதற்கு யார் காரணம்? அரசால் துயரப்படும் மக்களின் கேள்விகளுக்கு மோடி நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்" என கூறியுள்ளார்.
அதேபோல் உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், " போலி அரசாங்கத்தின் பொய்யான தொழில்நுட்பம் எத்தனையோ பேரின் உயிரைப் பறித்துள்ளது. இதற்கு அமைச்சர் முதல் ரயில்வே துறை அதிகாரிகள் வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்து சம்பவத்தை ஊழல், கிரிமினல் வழக்குகள் போல விசாரித்து தண்டனைக்குரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, "புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில் என கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கிற பா.ஜ.க. அரசு, ரயில் விபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ரூ. 40,000 கோடி நிதியை ஏன் ஒதுக்கவில்லை? ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்திற்கு யார் பொறுப்பு?
1956 ஆம் ஆண்டு அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்ட போது அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அதைப்போல, ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்திற்கு உரியப் பொறுப்பு ஏற்று இன்றைய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.