இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் வைத்துக் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
மேலும் போலிஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்க்கிறது. ஆனால் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"நாட்டிற்காகப் பதக்கங்களை வென்று கொடுத்தவர்களுக்குக் கொடுக்கும் கவுரவம் இதுதானா?" என அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தாங்கள் வென்ற பதக்கங்களைக் கங்கையில் வீசப்போவதாக அறிவித்து நேற்று மல்யுத்த வீராங்கனைகள் கங்கை ஆற்றுக்குச் சென்றனர். அப்போது அவர்களிடம் விவசாயச் சங்கத் தலைவர்கள் சமாதானப்படுத்தி அவர்களது பதக்கங்களை வாங்கிக் கொண்டனர்.
இதற்கிடையில் வீட்டிலிருந்து பதக்கங்களை மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் தயார் என பூஷன் சரன் சிங் ஆணவத்துடன் பேசியுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பிரிஜ் பூஷன், "வீராங்கனைகள் தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை சமர்ப்பித்தால், நீதிமன்றம் வழங்கும் எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயார். நான் தூக்கில் தொங்கவும் தயாராக உள்ளேன்.
குற்றச்சாட்டுகள் மீது டெல்லி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டில் உண்மை இருப்பின் அவர்கள் என்னைக் கைது செய்வார்கள். பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாக வீரர்கள் அறிவித்தது அவர்களது முடிவு. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என தெரிவித்துள்ளார்.