கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவியது. பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். மேலும் சோனியா காந்தியிடமும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தேர்வு செய்து அறிவித்தது. அதன்படி இன்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
கர்நாடக மாநிலத்தின் கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இரண்டாவது முறையாக முதலமைச்சராக சித்தராமையாவும், முதல் முறையாக துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாருடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர் பதவிகளையும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய படி, முதல் முக்கிய 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த முக்கிய வாக்குறுதிகள் பின் வருமாறு : -
1. கிரகஜோதி என்ற திட்டத்தின்கீழ் - மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
2. கிரகஷ்மி என்ற திட்டத்தின்கீழ் - மாதந்தோறும் பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
3. அன்ன பாக்யா என்ற திட்டத்தின் அடிப்படையில் - வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
4. யுவநிதி என்ற அறிவிப்பின் கீழ் - வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயும், வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும்.
5. சக்தி திட்டத்தின் கீழ் - அனைத்து பெண்களுக்கும் மாநிலத்தின் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.